” பழைய போகம்பரை சிறைச்சாலை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளதால் கண்டி நகருக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.” – என்று எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியல்ல எம்.பி.தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (18) ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பழைய போகம்பரை சிறைச்சாலை அமைந்துள்ள பகுதியிலேயே கண்டி பொதுச்சந்தை, ரயில் நிலையம், பஸ் தரிப்பிடம் ஆகியன அமைந்துள்ளன. சிறைச்சாலையில் வேலை செய்யும் சுமார் 50 அதிகாரிகள் நாளாந்தம் நகர்ப்பகுதிக்கு வந்துசெல்கின்றனர். நேற்று கைதிகள்கூட தப்பியோட முயற்சித்துள்ளனர்.
குறித்த சிறைச்சாலை தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது, ஆரம்பத்தில் 100 பேரே கொண்டுவரப்படுவார்கள் எனக்கூறப்பட்டாலும் அந்த எண்ணிக்கை 800வரை அதிகரித்துள்ளது. இதனால் கண்டி நகரம் ஆபத்தில் இருக்கின்றது. எந்நேரத்திலும் கொரோணா கொத்தணியொன்று உருவாகலாம். எனவே, குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தை கண்டி நகரில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.” – என்றார் லக்ஷ்மன் கிரியல்ல.