ஹட்டன், கினிகத்தேன ஹிட்டிகேகம பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்று வயது குழந்தை, மூன்று ஆண்கள் மற்றும் பெண்ணொருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து நுவரெலியா மாவட்டத்துக்கு வருபவர்கள் கினிகத்தேனை, கலுகல்ல பகுதியில் உள்ள சோதனைச்சாவடிக்கு அருகாமையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கடந்த சனிக்கிழமை முதல் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் மூன்று வயது குழந்தையின் தாயிடமும் கொழும்பில் இருந்து வந்தவர் என்ற அடிப்படையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே ஐவருக்கு வைரஸ் தொற்று இன்று (26) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களை சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
