கொவிட் தொற்று பரவல் பற்றிய தகவல்களை தரும்படி உலக சுகாதார அமைப்பு , சீனாவை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி இருப்பதோடு கொரோனா தொற்றின் புதிய திரிபுக்கு எதிராக போராடி வரும் அமெரிக்காவின் வெளிப்படைத் தன்மையை பாராட்டியுள்ளது.
தற்போதைய கொவிட் சம்பவங்களது அதிகரிப்பின் உண்மையான அளவை சீனாவின் உத்தியோகபூர் தரவுகள் காண்பிப்பதில்லை என்பது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு தொடர்ச்சியாக கவலை வெளியிட்டு வருகிறது.
“சீனாவில் உயிரிழப்புகள் இன்னும் குறைவாகவே பதிவு செய்யப்படுவதாக உலக சுகாதார அமைப்பு நம்புகிறது” என்று அந்த அமைப்பின் அவசரநிலைகளுக்கான பணிப்பாளர் மைக்கல் ரியான் கடந்த புதனன்று (11) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மறுபுறம் அமெரிக்காவில்் ஒமிக்ரோன் உப திரிபான எக்ஸ்.பி.பி. 1.5 வேகமாகப் பரவிவரும் நிலையில் அந்நாட்டு நிர்வாகம் ஒத்துழைப்புடன் செயற்படுவது பற்றி பாராட்டியுள்ளார்.
“தரவுகள் மற்றும் அந்த தரவுகளின் தாக்கங்கள் தொடர்பில் உலக சுகாதார அமைப்புடன் அமெரிக்கா மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட்டு வருகிறது” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எக்ஸ்.பி.பி. 1.5 தற்போது 38 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதோடு வேகமாக பரவுவது உறுதியாகியுள்ளது. அது முந்தைய நோய்த் தொற்றுக்கான எதிர்ப்புச் சக்தி அல்லது தடுப்பூசியின் திறனை பலவீனப்படுத்தி செயற்படுவதாக நம்பப்படுகிறது.
சீனா கடந்த மூன்று ஆண்டுகளாக செயற்படுத்தி வந்த கண்டிப்பான கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையிலேயே அங்கு நோய்த் தொற்று தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது. அங்கு மருத்துவமனைகள் நிரம்பி வருவதோடு தகன கூடங்களும் நிரம்பி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் உத்தியோகபூர்வ தரவுகளின்படி சீனாவில் கடந்த மாதம் தொடக்கம் 37 பேரே நோய்த் தொற்றினால் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
