கண்டி வாவிக்கு அருகில் அம்பிட்டிய சந்தியில் வசித்து வந்த காணி மற்றும் சொத்துக்களுக்கு உரிமையாளரான கோடீஸ்வர பெண் ஒருவர் நேற்று(14) பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தாயான கமனி ரணசிங்க (64) என்பவராவார்.

அவர் தொழில் திணைக்களத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராவார். குறிப்பிட்ட பெண்ணின் கணவர் அண்மையில் காலமானதோடு அவரின் பிள்ளைகள் அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றார்கள். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு அம்பிட்டிய சந்தியில் பல கட்டிடங்கள் சொந்தமாகவுள்ளன. அதன் மூலம் மாதந்தோறும் அவருக்கு லட்சக்கணக்கில் கூலியாக பணம் கிடைத்து வந்துள்ளது.
பிற்பகல் 2 மணி அளவில் அவரது வீட்டிற்கு சென்ற வேளையில் பல இடங்களில் இரத்தக்கறைகள் காணப்பட்டதாகவும் கருப்பு நிற 5 அடி உயரமான மனிதன் ஒருவன் கையில் கத்தியுடன் வீட்டிலிருந்து வெளியேறுவதை கண்டதாகவும் அயலவர் ஒருவர் கூறியுள்ளார் . கத்தியை வைத்திருந்த மனிதனின் கையும் வெட்டுப்பட்டு இரத்தம் கசிந்ததாகவும் இது குடும்பப் பிரச்சினை எனக்கூறி தன்னையும் கத்தியை காட்டி மிரட்டியதாகவும் அந் நபர் தெரிவித்துள்ளார்.
வீட்டிற்குள் சென்று பார்த்த போது அப்பெண்ணின் முனங்கல் சத்தம் கேட்டதாகவும் சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டதால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவில்லை என்றும் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் அவர் கூறினார். கொலை தொடர்பான சந்தேக நபரை கைது செய்வதற்காக கண்டி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.










