” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவர் கோட்டாபய ராஜபக்ச. மற்றையவர் மைத்திரிபால சிறிசேன.” – என்று நாடாளுமன்றத்தில் பரபரப்பானதொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா.
இதன்போது மைத்திரிபால சிறிசேனவுக்கும், பொன்சேகாவுக்கும் இடையில் கடும் சொற்போர் மூண்டது. நாகரீகமற்ற சில வார்த்தை பிரயோகங்களைப் பயன்படுத்தி மைத்திரிமீது சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்தார் பொன்சேகா. இதற்கு மைத்திரியும் பதிலடி கொடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பொன்சேகா எம்.பி., கூறியவை வருமாறு,
” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏப்ரல் 4, ஏப்ரல் 20 மற்றும் ஏப்ரல் 21 (காலைவேளை) ஆம் திகதிகளில் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பிடம் இருந்து அப்போது அரச புலனாய்வு பிரிவு பிரதானியாக இருந்த நிலாந்த ஜயவர்தனவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
நிலாந்த ஜயவர்தன அப்போது பாதுகாப்பு அமைச்சராகவும், ஜனாதிபதியாகவும் இருந்தவருடன் நாளொன்றுக்கு இரண்டு மூன்று தடவைகள் கலந்துரையாடல் நடத்திவந்துள்ளார். ஒன்று தொலைபேசி உரையாடல் இடம்பெறும், இல்லையேல் நேரடி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அவர் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஏப்ரல் தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் அவர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடைபெறுவதற்கு 4 நாட்களுக்கு முன்னர்கூட அவர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார். இவ்வாறான பயங்கர தகவல் கிடைத்தும், அது தொடர்பில் அவர் ஏன் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தவில்லை? அவருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். சிலவேளை அவர் தெரியப்படுத்தியிருந்தால் ஜனாதிபதி அதனை பொறுப்பேற்க வேண்டும்.
இக்காலப்பகுதியில் ஜனாதிபதி (மைத்திரிபால சிறிசேன) செயற்பட்ட விதம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். அவரின் இந்த நடத்தை தாக்குதலுக்கு வழிவகுத்ததா என்பது பற்றியும் ஆராய வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் இரு மாதங்களாக பாதுகாப்புசபை கூட்டம் நடத்தப்படவில்லை. அத்துடன், 2018 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் ஒக்டோபர் 23 முதல் பொலிஸ்மா அதிபருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பின்னர் பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்த நாலக சில்வாவை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்தனர். சஹ்ரான் தொடர்பில் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிதான் நாலக சில்வா. ஆட்சிகவிழ்ப்பு சூழ்ச்சியும் இடம்பெற்றது. இவ்வாறு பாதுகாப்பை பலவீனப்படுததும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
2019 ஜனவரி 3 ஆம் திகதி மலேசியாவில் இருந்த சுரேஷ் சலே இந்தியாவுக்கு அனுப்பட்டார். இதனையும் அப்போதைய ஜனாதிபதிதான் செய்திருக்ககூடும்.
தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி இந்தியாவுக்கு ஓடினார். அங்கிந்து சிங்கப்பூருக்கு சென்றார். தாக்குதல் நடந்த தினத்தில் சிங்கப்பூரில் இருந்துள்ளார். இந்தியாவில் இருந்த காலப்பகுதியில் அவர் நிச்சயம் சலேவை சந்தித்திருக்ககூடும் என நான் உறுதியாக நம்புகின்றேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான இரு சூத்திரதாரிகளில் ஒருவர் இவர் (மைத்திரி), மற்றையவர் கோட்டாபய ராஜபக்ச. நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையிலும் மைத்திரி பொய்யுரைத்தார். இப்படியான அரச தலைவர் உலகில் வேறு எங்கும் இருந்திருக்கமுடியாது.” – என்றார்.