” வரிசைகளில் காத்திருந்து மடிந்தது போதும். மக்களை வதைக்கும் இந்த அரசை விரட்டியடிக்க ஓரணியில் திரள்வோம். “
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அறைகூவல் விடுத்துள்ளார்.
‘வீதிக்கு இறங்குவோம், அரசை விரட்டியடிப்போம்’ என்ற தொனிப்பொருளின்கீழ் அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எரிசக்தி அமைச்சர் இருக்கிறார், ஆனால், நாட்டில் எரிபொருள் இல்லை. விவசாயத்துறைக்கு அமைச்சர் இருந்தும், வயல்களுக்கு உரம் இல்லை.
அரச நிர்வாகத்துக்கும் ஓர் அமைச்சர். ஆனால் அரச நிறுவனங்களுக்கு பூட்டு. பாடசாலைகள் எப்போது மூடப்படும் என்பதை அறிவிக்க ‘கல்வி அமைச்சர்’
எதற்காக இப்படியான அமைச்சர்கள்? எரிபொருள் வருமா, வராதா என்பதை அறிவிக்கவும், பாடசாலைகள் திறக்கப்படுமா, மூடப்படுமா என்பதை அறிவிக்கவும் அமைச்சர்கள் தேவைதானா?
இந்த அரசால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. தேசிய மக்கள் சக்தியாக நாட்டை மீட்டெடுக்கவும், ஆட்சியை பொறுப்பேற்கவும் நாம் தயார். ” – என்றார்.
