‘கோப்’ என்றழைக்கப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக ஆளுங்கட்சி அமைச்சரொருவரே நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.
நாடாளுமன்றத்தில் செயற்படும் குழுக்களில் மிகமுக்கிய குழுவாக கோப்குழு கருதப்படுகின்றது. கடந்த ஆட்சியின்போது இக்குழுவின் தலைமைப்பதவி எதிரணி உறுப்பினராக இருந்த சுனில் ஹந்துனெத்திக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதனை அடிப்படையாகக்கொண்டு அப்பதவியை இம்முறை எதிரணிக்கு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி சபையில் கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும், இதற்கு ஆளுங்கட்சி உடன்படவில்லை எனவும், அமைச்சர் ஒருவருக்கே அப்பதவி வழங்கப்படவுள்ளது எனவும் அரசியல் வட்டாரங்களில் அறியமுடிகின்றது.
அத்துடன், அரச கணக்குக்குழுவின் தலைமைப்பதவியும் ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது. 8ஆவது நாடாளுமன்றத்தில் இக்குழுவின் தலைவராக லசந்த அழகியவன்ன செயற்பட்டார். அவர் அப்போது சுதந்திரக்கட்சியில் சார்பில் அரசாங்கத்துடன் இணைந்திருந்தார். இம்முறை மொட்டு கட்சி உறுப்பினராக பாராளுமன்றம் தெரிவாகியுள்ளார்.