மலையக சமூக விடுதலைக்காக எல்லா வழிகளிலும் போராடி, மக்களுக்காக சிறை தண்டனைகூட அனுபவித்து பல்வேறு சவால்கள், தடைகள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமது அரசியல் பயணத்தை தொடர்ந்த அமரர் அ.லோரன்ஸின் வாழ்க்கை குறிப்பின் 2 ஆவது பாகம் இது….
பிறப்பு, ஆரம்பக்கல்வி, உயர்கல்வி, குடும்ப விபரம், போராட்ட வாழ்வு உள்ளிட்ட விடயங்களை நேற்று பதிவிட்டிருந்தேன்.
கொழும்பு, மகஸின் சிறைச்சாலையில், சிறைவைக்கப்பட்ட லோரன்ஸ், பின்நாளில் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டார்.
பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி இருந்தும், போராட்டம்மீதான பற்றால் அவர் பல்கலைக்கழகம் செல்லவில்லை. எனினும், சிறையில் இருந்து வந்த பின்னர் பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற தீர்மானித்தார்.
அவர் இலங்கை குடியுரிமையை கொண்டிருக்காததால், கட்டணம் செலுத்தியே பல்கலைக்கழகத்தில் பயில வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு மாணவர் அமைப்பும், பல்கலைக்கழக நிர்வாகமும் உதவியது. பிறகு இலங்கை குடியுரிமை கிடைத்ததும், செலுத்திய கட்டணங்கள் மீள வழங்கப்பட்டன.
பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்தில் காதர் உள்ளிட்ட வெகுஜன அமைப்பு தோழர்களுடன் இணைந்து ‘விடிவு’ எனும் பத்திரிகை வெளிவர பங்களிப்பு வழங்கியதாகவும், அதன் ஆசிரியராக தானே செயற்பட்டதாகவும் லோரன்ஸ் அவர்கள் குறிப்பிட்டார். பல்கலைக்கழக நட்பு, அதன்மூலம் ஏற்பட்ட தொடர்புகள், அங்கு எவ்வாறு சமூக மாற்றத்துக்கான சிந்தனைகள் விதைக்கப்பட்டன உள்ளிட்ட காரணிகளையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
1980 களில் அரச சேவையில் இணைந்தார். இளைஞர் சேவைகள் மன்றத்தின் நுவரெலியா மாவட்ட அதிகாரியாக பதவி வகித்தார். அரச சேவையில் இருந்துகொண்டே சமூகம் சார் நடவடிக்கையிலும் இறங்கினார்.
1982 இல் திருமண வாழ்வில் இணைந்தார். பதுளை மாவட்டத்தை சேர்ந்த தேவாம்பாளை கரம்பிடித்தார். அவரும் ஒரு பட்டதாரி. ஆசிரியர், அதிபர் மற்றும் உதவி கல்வி பணிப்பாளர் பதவிகளை வகித்துள்ளார். (இவர்களுக்கு இரு மகன்மார் உள்ளனர்.)
1989 இல் மலையக மக்கள் முன்னணி உதயமானபோது அதில் ஸ்தாபக உறுப்பினராக லோரன்ஸ் இடம்பிடித்தார். 89 பொதுத்தேர்தலில் மலையக மக்கள் முன்னணி போட்டியிட்டது. எனினும், பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிட்டவில்லை. குறிப்பிட்டளவு வாக்கு வங்கி கிடைத்தது. மலையகத்தில் மாற்று அரசியல் சக்தியாகவும் உருவெடுத்தது.
1989 முதல் மரணிக்கும்வரை அவர் மலையக மக்கள் முன்னணியிலேயே அங்கம் வகித்தார். கட்சி தாவும் அரசியலை முன்னெடுத்தது கிடையாது. மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர், உப தலைவர் மற்றும் பிரதித் தலைவர் பதவிகளையும் வகித்தார்.
மலையக மக்கள் முன்னணிக்குள் உள்ளக மோதல்கள் ஏற்பட்டபோதெல்லாம் கட்சியின் ஒற்றுமைக்காகவும், சமரச முயற்சிகளிலும் லோரன்ஸ் அவர்களே ஈடுபடுவார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி என்பன இணைந்து சேவல் சின்னத்தில் சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டன. இந்த கூட்டணியால் சப்ரகமுவ மாகாணசபைக்கு இரு தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைத்தது. இந்த கூட்டணி அமைவதற்கும் லோரன்ஸ் பங்களிப்பு வழங்கினார்.
2015 ஆம் ஆண்டு தமிழ் முற்போக்கு கூட்டணி உயதமானபோது அதன் ஸ்தாபக பொதுச்செயலாளராக லோரன்ஸே செயற்பட்டார். பங்காளிகளை அரவணைத்துக்கொண்டு பயணிக்கும் அரசியல் பக்கும் கொண்டவர். பின்னர் சாப்டர் கூட்டணியின் செயலாளராக நியமிக்கப்பட்டாலும் அரசியல் குழுவில் நீடித்தார்.
மலையகத்தில் அபிவிருத்தி மற்றும் சலுகை அரசியலுக்கு அப்பால் உரிமை அரசியலுக்கு உயிர் கொடுத்தவர்களில் லோரன்சும் ஒருவர். தனி அலகு, அதிகாரப்பகிர்வு, தேசிய இனம் போன்ற விடயங்களை சமூகமயப்படுத்தும் வகையில் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எல்லாவற்றுக்கு மேலாக இளைஞர்கள், மரியாதை நிமித்தம் அவரை சந்திக்க சென்றால், உரிமை அரசியல் பற்றி விரிவானதொரு பாடத்தையே எடுத்துவிடுவார்.
இவ்வாறு சமூகம்மீது பற்றுகொண்ட ஒரு நேர்மையான அரசியல்வாதி நாடாளுமன்றத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. எனினும், அவர் மறைந்த பின்னர் அவர் தொடர்பில் வெளியான பதிவுகள், மக்களின் இதயங்களில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார் என்பதற்கு சான்று. இது மகிழ்ச்சியளிக்கின்றது.
ஆர்.சனத்
நேற்றைய பதிவு
லோரன்ஸ் ஐயாவின் வாழ்க்கை பயணம் 1952 – 2023!
பிறப்பு- 1952 ஜனவரி 21.
பிறந்த மண் – தலவாக்கலை ஒலிரூட் தோட்டம்.
தாயின் பெயர் – மரியா ஆரோக்கியம் மேரி.
தந்தையின் பெயர் – அந்தனி.
5 சகோதரர்கள், 5 சகோதரிகள். குடும்பத்தில் ஆறாவதாக பிறந்த குழந்தையே லோரன்ஸ்.
ஆரம்ப கல்வி – ஒலிரூட் தோட்ட பாடசாலை. அதன்பின்னர் சாதாரணதரம்வரை
தலவாக்கலை பெட்ரிக் பாடசாலை.
உயர்தரம் – ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி.
பட்டப்படிப்பு – கொழும்பு பல்கலைக்கழகம்.
அரசியல் பயணம்……
1969 இல் மாணவராக இருந்தபோதே இவருக்கு அரசியல்மீது ஆர்வம் ஏற்பட்டது. தமிழகத்தின் பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைவழி அரசியல் பயணமே இவரின் பார்வையையும் அரசியல் பக்கம் திரும்பியுள்ளது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுடன் இணைந்து, முதலாளி வர்க்கத்தால் அடிமையாக நடத்தப்பட்ட மலையகத் தமிழர்களுக்காக உரிமைக் குரல் எழுப்பியதுடன், பல புரட்சிகரமான திட்டங்களையும் முன்னெடுத்துள்ளார்.
குறிப்பாக 1969 இல் கம்யூனிஸ் கட்சி நடத்திய மே தினத்தின்போது நவீன காமன் கூத்து என்ற மகுடத்தின்கீழ் இடதுசாரி கொள்கை மக்கள் மயப்படுத்தப்பட்டது. இதில் லோரன்சும் தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.
கீழைக்காற்று இயக்கத்தில் இணைந்து, சமூக விடுதலைக்கான பயணத்தில் ஆயுதப்பயிற்சியும் பெற்றார்.
” நக்கில்ஸ் மலைத்தொடரில்தான் முகாம்கள் அமைத்து பயிற்சிபெற்றோம். இதற்கிடையில் தலைமறைவு வாழ்வும் தொடர்ந்தது. காலபோக்கில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டோம்.
1974 இல் மகஸின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது. விசாரணை எப்படி நடந்திருக்கும் என சொல்லவேண்டியதில்லை.
தாய், தந்தை ஆகியோர் என்னை பார்வையிட வருவார்கள். காலம் பறந்தது. கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டது. நான் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி இருந்ததால் அங்கு பயிலவும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
பல தரப்புகளினதும் ஆலோசனையின்படி பல்கலைக்கழகம் சென்றேன். திறமையை வெளிப்படுத்தி சிறப்பு சித்தியுடன் பட்டம் பெற்றேன்.










