” சம்பந்தன் தமிழர்களின் அடையாளம் – அவர் பதவி விலகக் கூடாது” – விக்னேஸ்வரன்

“சம்பந்தன் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை.”

– இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கேள்வி – பதில் அறிக்கையை ஊடகங்களுக்கு வெளியிடுவது வழமை. அவ்வாறு வெளியிட்ட கேள்வி – பதிலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன் முழு விவரம் வருமாறு:-

கேள்வி:- சம்பந்தன் பதவி விலகல் சம்பந்தமான விடயத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- அவர் தாம் பதவி விலகத் தேவையில்லை என்று கூறியுள்ளார். அவரைக் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சம்பந்தனின் நாடாளுமன்றக் காலம் 2025 வரை என்று இருந்தாலும் நாடாளுமன்றம் அதற்கு முன்னர் கலைக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்களே அதிகம்.

வடக்கு – கிழக்குத் தமிழ் நாடாளுமன்ற அங்கத்தவர்கள் நாடாளுமன்றத்தில் தமது குரலையும் உடலையும் வெளிக்காட்டுவதுதான் அவர்களின் கடமை என்று நினைப்பது தவறு. தமிழ் மக்களின் வருங்காலம் நாடாளுமன்றத்தால் அதன் பெரும்பான்மை அங்கத்தவர்களின் விருப்புடன் சுமுகமாக நிர்ணயிக்கப்படப் போவதில்லை. ஊரறிய உலகறிய எமது அவலங்களை வெளிநாட்டு அரசாங்கங்களுக்குத் தெரியப்படுத்தி, இலங்கை சம்பந்தமான பொதுக் கருத்தை வெளிநாடுகளில் எமது புலம்பெயர் சகோதரர் வாயிலாக எழ வைத்து எமது நாட்டின் அரசாங்கத்துக்குப் போதிய நெருக்குதல்களை ஏற்படுத்தினால்தான் ஏதாவது நடக்கும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை பாரப்படுத்தினால் எமக்கு நன்மைகள் கிடைக்கலாம். அப்போதுகூட சீனாவிடம் முழுமையாக சரணாகதி அடைய சிங்கள அரசியல்வாதிகள் ஆயத்தமாக உள்ளார்கள். தமிழர்களின் உரிமைகளை வழங்குவதிலும் பார்க்க எவரிடமும் நாம் மண்டியிடத் தயார் என்பதே அவர்களின் மனோநிலை.

இந்த விதத்தில் தமிழ் மக்களின் தற்போதைய நிலையை அறிய அவர்களின் இதுவரை கால அவலங்களை அறிய, அவர்களின் அபிலாஷைகளை அறிய வெளிநாட்டுத் தூதரகங்கள் நாடும் முக்கிய நபர் சம்பந்தனே.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்கூட அண்மையில் அவரின் வாசஸ்தலம் சென்று அவரைச் சந்தித்தார். அவர் பேசுவது விளங்காவிட்டாலும் பக்கத்தில் இருந்து அவற்றை அவர்களுக்கு விளங்கப்படுத்த சுமந்திரன் போன்றவர்கள் முன்வரவேண்டும்.

அவரைப் புறக்கணிக்கவோ – நீக்கவோ நடவடிக்கை எடுக்காமல் அவரின் பங்கை தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதே – அவரின் பெயரைச் சொல்லி இதுவரை காலமும் அரசியல் நடத்தியோரின் கடமையாகும். வெளி உலகம் சம்பந்தனை ஒரு பக்கச்சார்பற்ற ஒரு நம்பகமான தமிழ்த் தலைவராக நினைக்கின்றது. அவரைப் புறக்கணிக்கவோ – நீக்கவோ முனைவது தமிழ் மக்களுக்கு இடையூறை விளைவிக்கும். அவர் வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை.

அவரில் பல குறைகள் இருந்துள்ளன – இருக்கின்றன. ஆனால், யாரிடந்தான் குறைகள் இல்லை? அதுவும் தமிழர்கள் மத்தியில் ஒரு தமிழர் பற்றி இன்னொரு தமிழரிடம் கேட்டால் யாரும் நினையாத குறைகள் எல்லாம் நிறைந்தோடி வெளிவந்து விடுவன. இதனால்தான் நான் அண்மையில் ஓர் ஊடகம் என்னிடம் கேள்வி கேட்டபோது இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஒரு கூட்டுத் தலைமை தேவை என்றேன். மாவை சேனாதிராஜா, சிறீதரன், சுமந்திரன் ஆகியோர் அந்தக் கூட்டுத் தலைமையில் இடம்பிடிக்க வேண்டும் என்றும் கூறினேன். தீர்மானங்கள் அவர்கள் மூவராலும் ஒருமித்து எடுக்கப்பட வேண்டும் என்றேன்.

சம்பந்தனை இருக்க விடுங்கள். தற்போதைய நாடாளுமன்ற காலம் முடிவடையும்போது அவரின் அங்கத்துவம் தானாகவே முடிந்துவிடும். திருகோணமலை மக்களின் தேவைகளைப் பார்க்க – பாதுகாக்க சம்பந்தன் ஒரு தகுந்த அமைப்பை உண்டு பண்ணுவார். இல்லை என்றால் அதனை அமைக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி அவருக்கு உதவி வழங்க வேண்டும்.

சம்பந்தனை வெளியேற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. சம்பந்தன் தனது சுயசரிதையை அல்லது தனது காலத்தில் நடந்த முக்கிய அரசியல் சந்திப்புகள் பற்றி ஒரு நூலை வெளியிட முன்வர வேண்டும். – என்று குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles