மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் முன்மொழிவு இடம்பெற்றுள்ள நிலையில், இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் பதவி விலக வேண்டும் என சிலர் வலியுறுத்திவருகின்றனர்.
அரசாங்கத்தால் 10 ரூபாகூட வழங்க முடியாது என ஜீவன் கூறி இருந்தார் எனவும், ஆனால் நாளாந்தம் 200 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது எனக் கூறியுமே இவ்வாறு வலியுறுத்தப்படுகின்றது.
இதற்கு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய ஜீவன் தொண்டமான் பதிலளித்தார்…..
அவர் கூறிய கருத்துகள் வருமாறு,
“ பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படுவது நல்ல விடயம். சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்றுதான் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஒவ்வொருமுறையும் கூறிவருகின்றன. ஆனால் அடிப்படை சம்பளம் அல்ல, ஊக்குவிப்பு கொடுப்பனவு பற்றியே கூறப்பட்டது என பின்னர் அறிவிப்பு வெளியாகும்.
எந்த பொறிமுறையின்கீழ் சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது என்பது பற்றி எமக்கு தெரிவிக்கப்பட வேண்டும். இதை பற்றிதான் நான் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் ஜீவன் தொண்டமான் பதவி விலக வேண்டும் என்கின்றனர். கருத்து கூறுவதால் பதவி விலக வேண்டுமா?
ஜனாதிபதியால் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க முடியுமானால் அது வரவேற்கப்படவேண்டிய விடயம். கடந்த முறை பாதீட்டில் 1,700 ரூபா உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனால் அது வழங்கப்படவில்லை. 4 ஆயிரத்து 500 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்றார்கள். ஒரு செங்கல்கூட வைக்க முடியாது என்றேன். அதேபோல ஒரு செங்கல்கூட வைக்கப்படவில்லை. பதுளை மாவட்டத்தில் வெத்து பேப்பர் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கு இராஜினாமா செய்;யாதவர்கள் எதற்காக என்னை இராஜினாமா செய்ய கோருகின்றனர்?
அடிப்படை சம்பளம் 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டால் அதனை வரவேற்போம். பெருந்தோட்ட நிறுவனங்கள் ஊடாக இதற்குரிய அறிவிப்பு வெளியாக வேண்டும். அரசாங்கமும் இதனை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிட வேண்டும். ” -என்றார் ஜீவன்










