“மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துவிட்டன.” என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள உயர்வு தொடர்பில் உறுதியளித்திருந்தோம். அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட நிறுவனங்களை அழைத்து பேச்சு நடத்தினோம். அடிப்படை சம்பளத்தில் 200 ரூபா அதிகரிப்பை வழங்குவதற்கு நிறுவனங்கள் இணங்கின. வரவுக்கான கொடுப்பனவாக அரசாஙகம் 200 ரூபாவை வழங்கும்.
தற்போது ஆயிரத்து 350 ரூபாவாக உள்ள அடிப்படை சம்பளம் ஆயிரத்து 550 ஆக அதிகரிக்கும். ஆரசாங்கத்தின் கொடுப்பனவு 200 ரூபாவையும் சேர்ந்து, தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரத்து 750 ரூபா வழங்கப்படும். இதற்காக 5 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதன்முறையாக தற்போதுதான் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கப்போகின்றது.” எனவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.










