சரத் வீரசேகரவை நாடாளுமன்றிலிருந்து வெளியேற்ற வேண்டும் – செல்வம் எம்.பி.!

” தமிழர்களுக்கு 13ஐ வழங்க வேண்டாம், சமஷ்டியை வழங்க வேண்டாம் எனக் கூறிக்கொண்டு மனநோயாளிபோல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர செயற்பட்டுவருகின்றார். எனவே, தமிழ் மக்களை சீண்ட வேண்டாம் என எச்சரித்துக்கொள்கின்றேன்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்றுள்ளார், அவர் எங்களை அழைத்து பேச்சு நடத்தியபோது 13 இல் பொலிஸ் அதிகாரத்தை வழங்கமுடியாது என்ற தொனியில் பேசினார். சமஷ்டி முறையிலான தீர்வே எமது விருப்பமாகும்.

13 ஆவது திருத்தச்சட்டம் என்பது அரசமைப்பில் உள்ள ஓர் விடயம். எனவே, அரசியலமைப்பைமீறுவதற்கு ஜனாதிபதிக்குகூட அருகதை இல்லை. ஆனால் ஜனாதிபதி உட்பட அரசியல் பிரமுகர்கள் அரசமைப்பைமீறும் பாதக செயலில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் தீர்வை வழங்குவார்களா என்ற ஐயப்பாடு எம்முள் உள்ளது ” – எனவும் செல்வம் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, போர்காலத்தில் சமையல் அறையில் இருந்த சரத் வீரசேகர, மனநோயாளிபோல் செயற்பட்டுவருகின்றார். குருந்தூர் மலை விவகாரத்திலும் மூக்கை நுழைக்கின்றார். சரத் வீரசேகர என்பவர் யார்? அவரை இயக்குவது யார்? அமெரிக்க தூதுவர், கனேடிய தூதுவர் எல்லாம் நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றார். இந்தியாவையும் சாடுகின்றார். அந்த மனநோயாளியை சபையில் இருந்து வெளியேற்ற வேண்டும். ” எனவும் செல்வம் அடைக்காலநாதன் எம்.பி. வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles