“ இலங்கையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் பனை உற்பத்திப்பொருட்களை காட்சிப்படுத்துவதற்குரிய காட்சி அறைகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க எளிமையானவர். மக்களால் அதிகம் விரும்பப்படும் தலைவர். எனவே, மக்கள் எதிர்பார்க்கும் எதிர்காலத்தை அவர் நிச்சயம் வழங்குவார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண பனை தென்னைவள, அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்கள் இணைந்து நடத்திய மாகாண பனை எழுச்சி வாரத்தினை முன்னிட்டு எங்கள் வாழ்வியலில் பனை என்ற தொனிப்பொருளில் நடத்திய பனைசார் உறுப்பினர் பொருட்களின் கண்காட்சியும், விற்பனையும் யாழ்.நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, யாழ்.மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ பனை உற்பத்தி துறையிலும் மாற்றமொன்று தேவை. அதற்கான ஆரம்பக்கட்டமாக இந்த கண்காட்சி அமையும் என நம்புகின்றேன். பனை எழுச்சி நிகழ்வை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றிகள். பனை உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்துகின்றவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பனை சம்பந்தப்பட்ட பொருட்களை நவீன பொருட்களாக மாற்ற வேண்டும்;. உற்பத்தி அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்களில் நவீன தொழில்நுட்பம் பற்றியும் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
பனை உற்பத்தி பொருட்களை , இலங்கையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களிலும் காட்சிப்படுத்துவதற்குரிய திட்டம் உள்ளது. ஒரு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் என்ற வகையில் அதற்குரிய நடவடிக்கையை நான் மேற்கொள்வேன்.
பனை அபிவிருத்தி சபை பெருந்தோட்ட அமைச்சின்கீழ்தான் இருக்கின்றது. எனினும், பனை மரங்களில் யாழில்தான் உள்ளது. எனவே, அது எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு வரக்கூடும்.
ஒரு கோடியே 50 லட்சம் பனை மரங்கள் உள்ளன. இவற்றை நாம் சரியான வகையில் பயன்படுத்கின்றோம்? உலக சந்தைக்கு ஏற்பட உற்பத்திகள் இடம்பெறுகின்றனவா? அதற்கு உற்பத்தியாளர்களுக்கு உரிய பங்களிப்பு கிடைக்கின்றனவா? இவை கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே, எமது அரசாங்கத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை, கடலட்டை என்பது கறுப்பு தங்கம். அவற்றை பறிப்பதற்கு சதியும், சூழ்ச்சியும் நடக்கின்றது. எனினும், இந்த சதி வலைகளில் எமது அரசாங்கம் சிக்குவதில்லை. எமது கடல்வளங்கள் நிச்சயம் பாதுகாக்கப்படும். “ – என்றார்.