அனுபவமற்றவர்களை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டாம் எனக் கோரினோம். அவ்வாறு அனுப்பியதால் நாட்டில் இன்று பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இலங்கைக்கு ஏதேனும் பிரச்சினையெனில் சவாலை ஏற்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தயாராகவே இருக்கின்றார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜித அபேவர்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அனுபவமுள்ளவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறு ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்திருந்தார். அப்போது இது தொடர்பில் கடும் விமர்சனங்களை சிலர் முன்வைத்தனர். ஆனால் அனுபவமற்றவர்களை அனுப்பியதால் இன்று ஏற்பட்டுள்ள நிலைமை என்னவென்பது புரிக்கின்றது.
நாட்டின் தற்போதைய நிலைமையை நாம் உன்னிப்பாக அவதானித்துவருகின்றோம். தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு குரங்கை காரணம் சொல்கின்றனர். ரணிலின் ஆட்சிகாலத்தில் குரங்கும் இருந்தது, தேங்காயும் இருந்தது.
அன்று நாம் சொன்னதை நாட்டு மக்கள் நம்பவில்லை. அது அவர்களின் உரிமை.
அதிகாரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இலங்கைக்கு பிரச்சினையெனில் சவாலை ஏற்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தயாராகவே இருக்கின்றார். இது தொடர்பில் இந்தியா செல்வதற்கு முன்னரும் அவர் அறிவித்துவிட்டே சென்றுள்ளார்.” – என்றார்.










