ஆட்டோவொன்றை வாடகைக்கு அமர்த்தி, சாரதியை தாக்கிவிட்டு ஆட்டோவை கொள்ளையடிக்க முற்பட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவரே கொடகவெல பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடகவெல , பல்லேபெத்த பகுதியில் ஆட்டோ பயணித்துக் கொண்டிருக்கையில், சாரதியின் கழுத்தை குறித்த பெண் நெறித்துள்ளார். அவரின் பிடிக்குள் இருந்து தப்பிக்க சாரதி முற்பட்டுள்ளார். இதன்போது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ வீதியில் கவிழ்ந்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பெண்ணை மடக்கிபிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த ஆட்டோவை கொள்ளையடிப்பதே தமது நோக்கம் எனவும், ஆட்டோவுக்கு பின்னால் தனது கணவன் மோட்டார் சைக்கிளில் வந்தார் எனவும், ஆட்டோ விபத்துக்குள்ளானதும் ஓடிவிட்டார் எனவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
சாரதி கொடகவெல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.










