” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடக்கும்போது கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக இருந்த அருண ஜயசேகரவே, தற்போது பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருக்கின்றார். நிலைமை இவ்வாரு இருக்கையில் எவ்வாறு நீதியான விசாரணையை எதிர்பார்க்க முடியும்?”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில்
கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,
” சாரா ஜஸ்மின் மாயமானார். டி.என்.ஏ. பரிசோதனையில்கூட சந்தேகம் உள்ளது. அச்சம்பவம் நடக்கும்போது கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக இருந்தவர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர. (தற்போதைய பிரதி பாதுகாப்பு அமைச்சர்)
தனது கடமையை நிறைவேற்ற தவறியதற்காக புலனாய்வு பிரிவு பிரதானியாக இருந்த நிலந்த ஜயவர்தன பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
எனவே, சாராவுக்கு என்ன நடந்தது, அவர் எங்கு சென்றார் என்பது கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக இருந்த அருண ஜயசேகரவுக்கு தெரிந்திருக்க வேண்டும். இவர் அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இருக்கின்றார். அவரை அப்பதவியில் வைத்துக்கொண்டு நீதியான விசாரணையை எதிர்பார்க்க முடியாது.” – என்றார்.