இந்திய திரையுலகில் ஈடு இணையற்ற இயக்குநரும், படைப்பாளியும், ஆளுமையுமான ராம் கோபால் வர்மா தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘சாரி ‘எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் கிரி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சாரி’ எனும் திரைப்படத்தில் நடிகர் சத்யா யாது கதையின் நாயகனாகவும், நடிகை ஆராத்யா கதையின் நாயகியாகவும் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தை ஆர் வி புரொடக்சன் சார்பில் தயாரிப்பாளர்கள் ராம் கோபால் வர்மா மற்றும் ரவி வர்மா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ம் திகதியன்று பட மாளிகையில் வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்துடன் படக்குழுவினர் உற்சாகமாக அறிவித்துள்ளனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” அளவுக்கு அதிகமாக சென்றால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் அதிகப்படியான காதல் அச்சுறுத்தும் என்பதுதான் இப்படத்தின் மைய புள்ளி.
இன்றைய இளைய தலைமுறையினர் சமூக ஊடகங்களின் தாக்கம் இல்லாமல் இருப்பதில்லை. சமூக ஊடகங்களால் தனி மனிதர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களையும், ஏற்படுத்தும் ஏமாற்றங்களையும் இப்படத்தின் திரைக்கதை விவரிக்கிறது” என்றார்.
இப்படத்தின் கிளர்வோட்டம் வெளியாகி இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.