சித்தார்த்தனின் பெயரை அங்கீகரிக்கவும் – சஜித் கோரிக்கை

அரசியலமைப்பு பேரவைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனை உள்வாங்குமாறு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியபோதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

” அரசியலமைப்பு பேரவையில் மூன்று சிவில் பிரதிநிதிகள் உட்பட 10 பேர் அங்கம் வகிக்க வேண்டும். இதுவரை 9 பேர்தான் இடம்பெற்றுள்ளனர். சிறுகட்சிகளின் சார்பில் சித்தார்த்தனின் பெயரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது. அதனை ஏற்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அவ்வாறு செய்யாவிட்டால் அது வடக்கு, கிழக்கு மக்களுக்கும் இந்நாட்டில் வாழும் சிறுபான்மை இன மக்களுக்கும் தவறான கருத்தை கொண்டு சேர்த்துவிடும் என்பதுடன், தவறான முன்னுதாரணமாகவும் அமைந்துவிடும்.” – எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு பேரவையில் 3 சிவில் பிரதிநிதிகள் உட்பட 10 பேர் இடம்பெற வேண்டும்.

பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் பதவிநிலை உறுப்பினர்கள். ஜனாதிபதியின் பிரதிநிதியாக நிமல் சிறிபாலடி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சியின் சார்பில் ஒருவர் தெரிவாக வேண்டும்.  அந்த இடத்துக்கே சித்தார்த்தனின் பெயரை கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.

எனினும், விமல் அணியும் தமது பிரதிநிதியொருவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாலேயே இது விடயத்தில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles