நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் ஜோன் டிலரி பகுதியில் நீண்ட காலமாக உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச்சென்ற லொறிகளில் களவாடி கும்பலை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நேற்று (18) அதிகாலை களவாடி ஒரு தொகை மரக்கறி மூட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன. மூவர் கைதாகியுள்ள நிலையில் ஏனையோரை கைது செய்யும் நடவடிக்கையும் இடம்பெற்றுவருகின்றது.
பலாங்கொடை , எம்பிலிபிட்டிய பகுதிகளிலிருந்து பொகவந்தலாவை ,நோர்வூட், மஸ்கெலியா , ஹட்டன் உட்பட நுவரெலியா மாவட்டத்தின் பல நகரங்களுக்கு கொண்டுவரப்படும் மரக்கறி, பழங்கள், தேங்காய் உள்ளிட்ட பொருட்களையே களவாடிவந்துள்ளனர்.
பொருட்களை ஏற்றிவரும் வாகனங்கள், பொகவந்தலா – நோர்வூட் பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகள் நடைபெற்று அதிகாலை வேளையில் மெதுவாக செல்ல வேண்டியுள்ளது.
இவ்வாறு வாகனங்கள் மெதுவாக செல்லும்போது, கொள்ளைக் கும்பலில் ஒருவர் லொறிகளில் ஏறி பொருட்களை வீதிக்கு இறக்குவதாகவும், பின்னால் வரும் ஆட்டோவில் அவை ஏற்றப்படும் எனவும் அதன்பின்னர் அவரை கடைகளுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் விசாரணைளில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் ஒரு தடைவைக்கு சுமார் 25000 தொடக்கம் 50000 வரையான உணவு பொருட்கள் களவாடி விற்பனை செய்துள்ளதாகவும் இதனை நீண்ட காலமாக செய்து வந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்டு ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்










