சீனாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் பாதுகாப்புச் செலவுகள் வேகமாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக அந்த நாடு நேற்று அறிவித்தது. ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் மூன்றாவது தவணைக்காக பதவியை வழங்கும் பாராளுமன்ற கூட்டம் ஆரம்பமான நிலையில் வெளிநாட்டில் இருந்து வரும் அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சீனா இந்த தசாப்தத்தில் மிகக் குறைவாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கை சுமார் ஐந்து வீதமாக அறிவித்திருக்கும் நிலையிலேயே அதன் பாதுகாப்பு செலவை அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது அதிக பாதுகாப்பு செலவை கொண்ட நாடாக சீனா உள்ளது.
2019 ஆம் ஆண்டு தொடக்கம் வேகமான அதிகரிப்பாக பாதுகாப்புச் செலவு 7.2 வீதம் அதிகரிக்கப்பட்டு 1.55 ட்ரில்லியன் யுவான் (225 பில்லியன் டொலர்) ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவே கடந்த ஆண்டு 7.1 வீதம் அதிகரிக்கப்பட்டிருந்தது.
எனினும் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் சீனாவின் பாதுகாப்பு பட்ஜட் மிகக் குறைவான அளவே உள்ளது. இந்த ஆண்டுக்காக அமெரிக்கா இராணுவத்திற்கு 800 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.