சீனா – தைவானிடையே பதற்றம் உக்கிரம்!

சீனாவில் 1927ஆம் ஆண்டு முதல் 1949ஆம் ஆண்டு வரை நடந்த உள்நாட்டு போருக்கு பின் தைவான் சீனாவிடம் இருந்து பிரிந்து தனி நாடாக உருவானது. ஆனால் சீனாவோ தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என்று தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் உலகின் பிற நாடுகள் தைவானின் சுதந்திரத்தை ஆதரிப்பதை சீனா கடுமையாக எதிர்க்கிறது.

ஆனால் அதை மீறி தைவானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு நீடிக்கும் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி தைவானுக்கு சென்றார்.

இதனால் கடும் கோபம் அடைந்த சீனா தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து கடல் மற்றும் வான்வெளியில் போர் பயிற்சியை தொடங்கியது.

அதன்படியே நேற்று முன்தினம் மதியம் 12 மணி வரையில் தொடர்ந்து 4 நாட்களாக சீனா ராணுவம் கடுமையான போர் பயிற்சியில் ஈடுபட்டது. சீன ராணுவத்தின் இந்த போர் பயிற்சி தங்கள் நாட்டின் மீது படையெடுப்பதற்கான ஒத்திகை என தைவான் குற்றம் சாட்டியது. இந்த நிலையில் சீன ராணுவம் நேற்று தைவானை சுற்றி புதிய போர் பயிற்சியை தொடங்கியது.

கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் மூலம் கடல்வழி தாக்குதல் மற்றும் தொலைதூர வான்தாக்குதல் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் இந்த போர் பயிற்சி நடத்தப்படுவதாக சீன ராணுவம் கூறியது. அதேசமயம் இந்த புதிய போர் பயிற்சி எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதை சீன ராணுவம் தெரிவிக்கவில்லை.

தைவானை சுற்றி தொடர்ந்து 4 நாட்கள் போர் பயிற்சியை நடத்திய பின்னர் சீனா மீண்டும் மிகப்பெரிய போர் பயிற்சியை தொடங்கி இருப்பதால் தைவான்-சீனா இடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

Related Articles

Latest Articles