” வீடுகளில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு நடமாடும் வாக்களிப்பு நிலையங்களினூடாக எதிர்வரும் 31 ஆம் திகதி வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.” – என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னரே தவிசாளர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
” தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஜூலை 31 ஆம் திகதி வாக்கெடுப்பை நடத்தவும், வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான வாக்கெடுப்பை 4 ஆம் திகதி நடத்தவும் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுடனான கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், 4 ஆம் திகதி அதனை மேற்கொள்வது சிரமம் என தற்போது தௌிவாகின்றது. ஏனெனில், வாக்குப்பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை 4 ஆம் திகதி ஏனைய வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லவுள்ளோம். இதனால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான வாக்கெடுப்பை ஜூலை 31 ஆம் திகதி நடத்த தற்போது தீர்மானித்துள்ளோம்.
எவரேனும் வீடுகளில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் 31 ஆம் திகதி அவர்கள் தமது வாக்கினை பதிவு செய்யமுடியும். குறித்த பகுதிகளில் நடமாடும் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அரசியல் கட்சிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு தமது பிரதிநிதிகளை அனுப்ப முடியும்
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் உள்ள வாக்காளர்கள் யார் என்பது தொடர்பான தகவல்களை சேகரிக்கவும் புகைப்படங்களை எடுத்து பகிரங்கப்படுத்துவதற்கும் ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.” – என்றார்.