“ நாட்டு மக்களின் பொருளாதார, சமூக, அரசியல் நலன்களைப் பாதுகாப்பதற்கு அனைத்து சலுகைகளையும் ஒதுக்கிவிட்டு, நாட்டின் தற்காலிகக் காவலர்களாக ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகபட்ச தியாகங்களைச் செய்யும்.” ஏன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டணி மற்றும் சுதந்திர மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே கூட்டணி அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (05) காலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ இந்த கூட்டணிகளுக்கு பின்னால் எந்த வரப்பிரசாதங்களும் சலுகைகளும் இல்லை. இன்னும் பல கட்ட மக்கள் மைய கூட்டணிகள் எதிர்காலத்தில் உருவாகும்.
சலுகைகள், பதவிகளுக்கு அல்ல நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதனை நாம் செய்வோம். சுயநலமின்றி பொது மக்களுக்கு சேவையாற்றும் உன்னத பொது சேவைக்காக அணி திரள்வோம் என அழைப்பு விடுக்கின்றோம்.
இனம், மதம், சாதி, குலம், கட்சி பேதமின்றி நாட்டை முன்னோக்கி கட்டியெழுப்பும் பயணத்தில் 220 இலட்சம் மக்களுக்கும் தலைமைத்துவம் வழங்க நான் தயார்.” – எனவும் சஜித் பிரேமதாச கூறினார்.
சுதந்திர மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ், nடிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, வசந்த யாப்பா பண்டார, கே.பி.எஸ். குமாரசிறி மற்றும் (வைத்தியர்) உபுல் கலப்பத்தி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.