ஹூதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து செங்கடலை பாதுகாப்பதற்காக அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்படும் கூட்டு பாதுகாப்பு நடவடிக்கைக்கு இலங்கை ஆதரவு வெளியிட்டதை வாஷிங்டன் பாராட்டியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பிரதி இராஜாங்க செயலாளர் இதனபோது பாராட்டுத் தெரிவித்தார்.
விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் உட்பட இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளருக்கு விளக்கமளித்தார்.
உலக பாதுகாப்பு தொடர்பான விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், செங்கடலில் இடம்பெறும் கடற்படை நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசு வழங்கிய ஆதரவிற்கு பிரதி இராஜாங்க செயலாளர் நன்றி தெரிவித்தார்.
ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்பில் சவூதி அரேபியாவின் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவு தெரிவித்த ஜனாதிபதி, இந்து சமுத்திரத்தின் சுதந்திரமான கடற்பயணத்திற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிக்கும் எனவும் உறுதியளித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பதில் செயலாளர் யூ.எல்.எம். ஜோஹர், சர்வதேச உறவுகள் பணிப்பாளர் தினுக் கொழம்பகே, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அமெரிக்க பிரிவின் பணிப்பாளர் சதுர் பெரேரா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.