” வென்றாலும், தோற்றாலும் வேறு கட்சிகளுடன் இனி அரசியலில் ஈடுபடமாட்டேன். செத்தாலும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினராகவே சாவேன். நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்களை பாதுகாப்பேன்.” – என்று ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் இன்று (25.07.2020) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் நவீன் திஸாநாயக்க மேலும் கூறியதாவது,
” ஐக்கிய தேசியக்கட்சியாக தனித்து போட்டியிடுவது தொடர்பில் ஆரம்பத்தில் எனக்கும் சிறு பயம் இருந்தது. ஆனால், கூட்டங்களை நடத்தும்போது மக்களின் பேராதரவு கிடைத்தது. எனவே, வெற்றிகரமாக பயணிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. எனவே, நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் நாம் நிச்சயம் இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றுவோம். ஆட்சியை பிடிப்பதே எமது இலக்கு. அதற்கான ஆட்டத்தையே ஆடிவருகின்றோம்.
ஐக்கிய தேசியக்கட்சிதான் அதிக ஜனநாயக பண்புகளைக்கொண்ட கட்சியாகும். தலைவர் பதவிக்குகூட வாக்கெடுப்புமூலமே உறுப்பினர் தெரிவுசெய்யப்படும் நிலைமை காணப்படுகின்றது. வேறு எந்த கட்சியிலும் இரகசிய வாக்கெடுப்பு நடைபெறுவதில்லை. இதற்கு முன்னரும் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து பலர் பிரிந்துசென்றனர். எனது தந்தை பிரிந்து சென்றார். டி.ஸ். சேனாநாயக்கவின் பேரானான ருக்மண் சேனாநாயக்க வெளியேறினார். ஆனால், கட்சிக்கு பாரிய தாக்கம் எதுவும் ஏற்படவில்லை. இம்முறையும் அப்படிதான்.
எமது கட்சியிலும் தலைவரிடமும் சில குறைப்பாடுகள் காணப்பட்டன. அவற்றை நிவர்த்தி செய்துள்ளோம். வேறு எந்தவொரு கட்சிக்கும் இனி செல்லக்கூடாது என்ற கொள்கையுடன்தான் ஐக்கிய தேசியக்கட்சிக்கு மீண்டும் வந்தேன். தற்போது எனக்கு 50 வயது, இன்னும் 20 வருடங்கள் உயிர்வாழ்வேன் என நம்புகின்றேன். அதுவரையில் ஐக்கிய தேசியக்கட்சியில்தான் இருப்பேன். கட்சி ஆதரவாளர்களை பாதுகாப்பேன். மரணிக்கும் நொடியில்கூட ஐ.தே.க. உறுப்பினராகவே இருப்பேன்.
கடந்த நான்கரை வருடங்களில் பல திட்டங்களை நாம் முன்னெடுத்தோம். அவற்றில் சில குறைப்பாடுகள் இருக்கலாம். அவற்றை நிவர்த்தி செய்து நாட்டை முன்நோக்கி அழைத்துச்செல்வதற்காகவே இன்னும் 5 ஆண்டுகளை கோருகின்றோம். நான் மக்களை அழிப்பவன் அல்ல, வளர்ப்பவன். அதனால்தான் இன்றளவிலும் எனது பின்னால் பலர் இருக்கின்றனர்.
ரணிலுடன் இணைந்ததான் பயணிப்பேன். அவருக்கு பின்னர் ஜனநாயக முறைப்படி தலைமைப்பதவியை ஏற்பதே எது விருப்பம்.” – என்றார்.
க.கிசாந்தன்