” தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு குறைந்துவிட்டது. ஐக்கிய மக்கள் சக்தியிலும் எழுச்சி இல்லை. எனவே, அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை நாம் மக்கள் மத்தியில் தீவிரமாக பிரச்சாரம் செய்ய வேண்டும்.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் இருந்து நாடு திரும்பிய கையோடு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுடன் ஜனாதிபதி சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார் என தெரியவருகின்றது.
இதற்கு பதிலளித்த மொட்டு கட்சி செயலாளர் சாகர காரியவசம், உங்களால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். எதுவாக இருந்தாலும் எமது கட்சிக்கு ஒரு தடவை அறிவித்துவிடுங்கள் என கோரிக்கை விடுத்தார்.
அதன்பின்னர் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,
” நெருக்கடியின்போது எவரும் நாட்டை பொறுப்பேற்கவில்லை. நாம் பொறுப்பேற்றோம். மறை பெறுமதியில் இருந்த பொருளாதாரம் தற்போது பூஜ்ஜிய மட்டத்துக்கு வந்துள்ளது. அடுத்து வரும் மாதங்களில் நேர் பெறுமதியை நோக்கி நகரும். ஆகவே, அரசால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் பற்றி மக்கள் மத்தியில் தெளிவுபடுத்துங்கள்.” – என்றார்.
இதற்கு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதன் அடுத்தக்கட்ட சந்திப்பு எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.










