ஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்கும், அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன எனவும், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார் எனவும் அமைச்சர் மனுச நாணயக்கார நேற்று அறிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டில் என்ன தேர்தல் நடைபெறவுள்ளது என பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர். முதலில் ஜனாதிபதி தேர்தலே நடத்தப்படும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஜனாதிபதி தேர்தலை ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெற வைப்பதற்குரிய ஏற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்துவருகின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என்ற தகவலை ஐக்கிய மக்கள் சக்தி பரப்பிவருகின்றது. ரணில் விக்கிரமசிங்கமீதான அச்சத்தாலும், தோல்வி பீதியாலுமே இவ்வாறான பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவார். இது தொடர்பான அறிவித்தலை அடுத்த மாதம் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். அதன்பின்னர் பலரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவார்கள்.” – என்றார்.
