ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசியல் பிரமுகர்களின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

புத்தாண்டின் விடியல், கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் எதிர்நோக்கும் சவால்களை சரியாகப் புரிந்துகொண்டு வாழ்க்கையைத் திட்டமிடுவதற்கும், உறுதியுடன் முன்னேறுவதற்கும் எம்மை ஊக்குவிக்கின்றது.
எனவே, மக்கள் ஆணைக்கும் எதிராக அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது. ஒரு நேர்மறையான மனப்பாங்குடனும், திடவுறுதி மற்றும் அர்ப்பணிப்புடனும் நாம் வரவேற்கிறோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நோய்த்தொற்றினை வெற்றிகொள்ள முழு உலகுடனும் இணைந்து நாமும் முன்னிலை வகித்துள்ளோம்.
கடுமையான சவால்கள் மற்றும் தடைகளுக்கு மத்தியிலும், தேசிய அபிலாஷைகளின் அடிப்படையில் நிலையான அபிவிருத்திக்கு அடித்தளம் அமைக்க எமக்கு முடிந்தது.
மக்களின் எதிர்பார்ப்புகளை அடைந்துகொள்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை புதிய ஆண்டில் மேலும் வலுப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளது.
மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தி மற்றும் தேசிய தனித்துவத்தைப் பாதுகாக்கும் எதிர்பார்ப்புடனேயே புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
நாட்டுக்கும் மக்கள் ஆணைக்கும் எதிராக அரசாங்கம் செயற்படாது என்ற அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை வீண்போக நாம் இடமளிக்கமாட்டோம்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச
“பாதுகாப்பான தேசத்திற்காக எமது தாய்நாட்டின் எதிர்காலம் குறித்து மக்கள் எம் மீது கொண்ட நம்பிக்கையை அன்புடன் நினைவுகூருகின்றோம்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மிகக் குறுகிய காலமே ஆன போதிலும், அக்காலப்பகுதியை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக செலவிடக்கூடியதாக அமைந்தமை குறித்து பெருமை கொள்கின்றோம்.
ஐந்து வருட காலமாக தடைப்பட்டிருந்த நாட்டின் மனிதவள மற்றும் பௌதீக அபிவிருத்தி செயற்பாடுகளை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு எமக்கு முடியுமானதாயிற்று. மக்களுக்கு அதனை கண்டு மகிழ்ச்சியடைய முடியும்.
கொவிட்-19 வைரஸின் சவாலுக்கு உலக நாடுகள் போன்றே நாமும் முகங்கொடுத்து வருகின்றோம்.
வைரஸின் தாக்கத்தை குறைப்பதற்கு வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார், பாதுகாப்புப் படையினர், அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் 24 மணி நேர அர்ப்பணிப்பு மிகுந்த சேவை அளப்பரியது.
கொவிட்-19 தொற்று காரணமாக மக்கள் மீது சுமைகள் சுமத்தப்படாதிருக்கும் வகையில் உச்ச தலையீட்டுடன் அரசாங்கம் பங்களிப்பு செலுத்தி வருகிறது.சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றும் ஒழுக்கம் மிகுந்த பொதுமக்களின், அரசாங்கத்திற்கான ஆதரவும் அளப்பரியதாகும்.
நாடு எதிர்கொண்டுள்ள இந்த சவால்களை மலர்ந்துள்ள புத்தாண்டில் நாம் ஒன்றிணைந்து வெற்றிக்கொள்ள முடியும். உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் அரச பொருளாதார கொள்கை திட்டத்தினூடாக நாட்டிற்குள் புதிய பொருளாதார மற்றும் அபிவிருத்தி புரட்சி ஏற்படும் என்பது உறுதி.
அதன் மூலம் உங்களதும், நாட்டினதும் எதிர்காலம் சாதகமான முறையில் வளர்ச்சியடையும் ஒரு சுபீட்சமான தேசம் உருவாகும். மிகக் குறுகிய விடயங்கள் காரணமாக நாம் இனிமேலும் வேறுபாடுகளுடன் காணப்படக் கூடாது.
எமது எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்திற்காகவே இன்று நாம் இத்தாய்நாட்டிற்காக கடினமாக உழைத்து எம்மை அர்ப்பணித்து வருகின்றோம். எனவே சமூக கலாசார மற்றும் மத சகவாழ்வுடன் செயற்படுவதன் மூலம் இலங்கையர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு மலர்ந்துள்ள இப்புத்தாண்டை ஒரு வாய்ப்பாக்கிக் கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.
மலர்ந்துள்ள இவ்வருடம் அனைவருக்கும் சபீட்சம் மிகுந்த புத்தாண்டாக அமைய பிரார்த்திக்கின்றேன்.
செந்தில் தொண்டமான்

பாரிய எதிர்பார்ப்புகள், இலட்சியங்களை நிறைவேற்றும் எண்ணங்களோடு ஆரம்பித்த 2020ஆம் ஆண்டு, கனவுகளாகவே கரைந்துபோன சோகத்தில் இருக்கும் எம்மக்களின் வாழ்வில், மலர்ந்துள்ள இந்தப் புத்தாண்டு, வசந்தத்தைக் கொண்டுவர வாழ்த்துகிறேன்.
கொரோனா எனும் கொடிய நோய் எம்மை ஆட்கொள்ளத் தொடங்கி ஒரு வருடத்துக்கும் மேலாகின்ற நிலையில், அதிலிருந்து மீள முடியாத பெருந்துயருக்குள் சிக்கியுள்ள அனைவரதும் வாழ்விலிருந்து இருள் நீங்கி, கதிரொளி பரப்பி, கவலைகள் துடைத்திடும் ஆரம்பத்தை, இந்நாள் இனிய நாளாகப் பெற்றுத்தரட்டும்.
நெருக்கடி மிகுந்த தொற்று நோய்ப் பேரிடர்காலத்திலிருந்து, உலகத்தாரும் எம்மக்களும் வேகமாக மீண்டு வரும் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் புதிய ஆண்டாகவே, இந்த 2021 மலர்ந்துள்ளது.
எண்ணற்ற சவால்களும் சங்கடங்களும் நிறைந்த 2020ஆம் ஆண்டின் தாக்கம், ஓரிரு நாள்களில் தணிந்துவிடாது. அதேபோன்று, அதை நீக்குவதற்கான ஆயுதமும், மக்களிடமே இருக்கிறது. சுய பாதுகாப்பை ஒவ்வொருவரும் கடைபிடித்து, வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளின் பிரகாரம் நடந்துகொள்வதன் ஊடாகவே, இந்தப் பிணியிலிருந்து நாம் மீளமுடியும்.
வருங்காலத்தைப் பற்றி வருடக்கணக்காய் யோசிப்பதைவிட, நிகழ்காலத்தைப் பற்றி நிமிடங்கள் சிந்தித்தாலே போதும். வாழ்வு வளமாக முன்னேறிச் செல்லும். இந்நிகழ்காலத்தில் நாம் எதிர்நோக்கிவரும் தடைகளைத் தகர்த்தெறிந்து, வளமான வாழ்வை நோக்கி நகரும் காலம் கனிந்துள்ளது.
இந்தப் புத்தாண்டு, உங்கள் வாழ்வில் மிகுந்த சந்தோஷங்களையும் வளங்களையும் கொண்டுவரும் ஆண்டாக அமையட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உதயா எம்.பி. – தொழிலாளர் தேசிய சங்கம்
மக்கள் ஒருவருக்கொருவர் கைகொடுத்து புத்தாண்டை வரவேற்ற கலாசாரம் மாறி, இம்முறை கைகழுவி, கைகூப்பி வரவேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, கொரோனாவின் ஓராண்டு கால அச்சுறுத்தல் நீங்கி மலரும் புத்தாண்டில் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வழிபிறக்க வேண்டும்.
நாட்டு மக்கள் யுத்தம், சுனாமி முதலான எத்தனையோ சவால்களுக்கு முகங் கொடுத்து வந்துள்ள போதிலும், “கொரோனா” போன்ற கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும். “வருமுன் காத்தல், வந்தபின் சிகிச்சை” என்ற சுகாதார நடைமுறைக்கு ஏற்ப முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட்டும், சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் வருகின்றது.
இந்நிலையில் தனிமனித சுய கட்டுப்பாட்டின் அடிப்படையிலேயே எமது சுகாதாரத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதேநேரம், மலையக மக்கள் எதிர்நோக்கி வரும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முடிவு காணும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் சம்பள உயர்வுக்கு தகுந்த முறையில் தீர்வு காணப்பட வேண்டும். மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
மலையக மக்கள் காலங் காலமாக எதிர்நோக்கிவரும் காணி, குடியிருப்பு பிரச்சினைகள் தீர்ந்து, அவர்களின் வாழ்வில் சுபிட்சம் தோன்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நாம் அனைவரும் கட்டுக்கோப்புடன் ஒற்றுமையாக இருந்து எமது பிரச்சினைகளை வென்றெடுக்க மனதில் உறுதி பூணுவோம்.










