அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை வலுப்படுத்த மற்றொரு ஜப்பான் விசேட மருத்துவக் குழு இலங்கைக்கு
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமது தொடர்ச்சியான ஆதரவைப் பிரதிபலிக்கம் வகையில், 27 பேருடனான மற்றொரு ஜப்பான் அனர்த்த நிவாரண (JDR) மருத்துவக் குழு நேற்று (03) இரவு இந்நாட்டிற்கு வந்தது.
வைத்தியர்கள், மருத்துவ நிபுணர்கள், நிவாரண அதிகாரிகள் மற்றும் மீட்பு நிபுணர்களைக் கொண்ட இந்தக் குழு, தேசிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, தரை மட்டத்தில் அத்தியாவசிய மருத்துவ உதவிகளை வழங்கவும், நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், அனர்த்த நிலைமையால் சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு தமது நிவாரண உதவிகளையும் வழங்கும்.
குழுவின் தலைவர் கிச்சிரோ இவாஸெ உள்ளிட்ட இந்த ஜப்பான் குழுவை, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கிழக்கு ஆசியா மற்றும் ஓசனியா பிரிவின் பணிப்பாளர் நாயகம் சாவித்ரி பானபோக்கே மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோர் உத்தியோகபூர்வமாக வரவேற்றனர். இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசோமாடா அகியோவும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.
மேலும், 04 பேர் கொண்ட ஜப்பான் மருத்துவக் குழு ஏற்கனவே இலங்கைக்கு அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக வந்திருந்ததுடன், அதன்படி, 31 பேர் கொண்ட ஜப்பான் மருத்துவக் குழு தற்போது நாட்டில் மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.










