ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 30 பேர் காயம்!

ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.5-ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் சுமார் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது.

வட ஜப்பானின் ஹோன் தீவிலுள்ள ஆவோமோரி, ஹொக்காடியோ தீவின் தென் பகுதிகளில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் அதிகமாக உணரப்பட்டது.
பல கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

இதைத் தொடர்ந்து ஜப்பானின் வடகடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 10 அடி உயரத்துக்கு சுனாமி பேரலை கடற்கரை பகுதிகளை தாக்கக்கூடும் என ஜப்பான் அரசு தரப்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதனால் கடற்கரை பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், 0.5 முதல் 0.7 மீட்டர் என்ற உயரத்தில் தான் கடல் அலைகள் எழும்பின. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஆவோமோரி டவுன் பகுதியில் ஓட்டலில் தங்கியிருந்த சிலர் காயம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் வெளியாகின.
ஆவோமோரி, ஹொக்காடியோ பகுதியில் நிலநடுக்கத்தின் அதிர்வு காரணமாக குடியிருப்புகளில் சுவர் மற்றும் மாடங்களில் வைக்கப்பட்ட பொருட்கள் கீழே விழுந்தன. சில இடங்களில் விபத்து சம்பவங்களும் ஏற்பட்டன.

 

Related Articles

Latest Articles