தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானிற்கும், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.



இதன் போது பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் தொடர்பாகவும், சுகாதாரதுறையில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை மற்றும் லிந்துலை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாகவும் சுகாதார அமைச்சரிடம் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதே வேளை லிந்துலை பிரதேச வைத்தியசாலையின் இடமாற்றம் சம்மந்தமாகவும் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள மருத்துவ மற்றும் மருத்துவர் பற்றாக்குறை அத்தோடு நோயாளர் காவு வண்டி நோயாளர் ஒருவரை இலகுவாக வைத்திசாலைக்கு கொண்டு செல்லும் முறை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
அதேவேளை, எதிர்காலத்தில் பெருந்தோட்ட பகுதிகளில் சிறந்த சுகாதார பொறிமுறைகளை உருவாக்குவது மட்டுமல்லாது ஏனைய பகுதிகளிலும் விஷேட திட்டங்களை உருவாக்குதல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்தோடு, விரைவில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சுக்கும் சுகாதார அமைச்சுக்கும் இடையில் சுகாதார மேம்பாட்டிற்கான குழு ஒன்றினை அமைத்து அதனூடாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அதேவேளை, சிறுவர்களுக்கான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பெருந்தொட்ட பகுதிகளில் இலவசமாக வழங்கப்படும் திரிபோசா சத்துணவு முறையாக வழங்குவது தொடர்பாகவும் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இக்கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரஜாசக்கி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் பரத் அருள்சாமி மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
