ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின்போது இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் முன்வைக்கப்படும் என பிரிட்டனும், கனடாவும் அநுர அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளன.
எனினும், கடந்த கால தீர்மானங்களுடன் ஒப்பிடுகையில் இது மென்போக்குடையதாக அமையும் என இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
இலங்கை தொடர்பான தீர்மானங்களுக்கு கடந்த காலங்களில் இணை அனுசரணை வழங்கிய அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறியுள்ளது. இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் கட்டமைப்பில் மாற்றம் வரவுள்ளது.
இலங்கை குறித்த கடந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய மலாவி, மொன்டினேக்ரோ, வட மாசிடோனியா ஆகிய நாடுகள் இம்முறை தீர்மானத்தில் பங்கேற்காமல் இருக்கலாம் என இலங்கை நம்புகின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அவர் அவதானித்த விடயங்கள் உட்பட இலங்கையின் மனித உரிமை நிலைவரம் குறித்த அவரின் அறிக்கை 60 ஆவது அமர்வில் முன்வைக்கப்படவுள்ளது. பெரும்பாலும் செப்டம்பர் 8 ஆம் திகதி அறிக்கை முன்வைக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது.
செம்மனி மனித புதைகுழி விவகாரம் இதில் முக்கிய இடத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, பொறுப்புக்கூறல் தொடர்பான உள்நாட்டு செயல்முறைகள் வலுப்படுத்தப்பட்டு, அரசியல் தலையீடுகள் தவிர்க்கப்பட்டுள்ளன என்ற விடயத்தை இலங்கை தரப்பு எடுத்துரைக்கவுள்ளது.