அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவரது வீட்டில் சூரிய குளியலில் ஈடுபடும் போது, டிரோன் தாக்குதலின் மூலம் அவரை கொல்வது எளிதான ஒன்று என்று ஈரானின் மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி கூறியிருப்பது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் அமெரிக்க தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் போரின் போது, ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது அந்நாட்டை கொதிப்படைய வைத்துள்ளது.
எனவே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு எதிராக ஈரான் தலைவர்கள் வெளிப்படையான மிரட்டல்களையும், கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரான் நாட்டு ஆட்சியாளரான அயதொல்லா அலி கமேனியின் மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறித்து பேசிய விஷயம் தற்போது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு ஈரான் தளபதி சுலைமாணியை டிரம்ப் உத்தரவின் பேரில் அமெரிக்கா கொன்றதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஈரான் மிரட்டல் குறித்து அதிபர் டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. உண்மையில் அது ஒரு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று கூறிய டிரம்ப், தான் கடைசியாக 7 வயதில் சூரிய குளியல் போட்டதாகவும், தனக்கு அதன் மீது ஆர்வமில்லை என்றும் கூறினார்.