ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
அமெரிக்காவின் நலன்களுக்காக பெரிய அளவில் மாற்றங்களை செய்யப்போவதாக கூறி , டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற நாளில் இருந்தே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
வெளிநாடுகள் மீதான வரி விதிப்பு, சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் உத்தரவு, கால நிலைமாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகல், உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகல், காசாவில் இருந்து பாலஸ்தீனர்களை தற்காலிகமாக வெளியேற்றுதல் என அவரது நடவடிக்கை அனைத்தும் உலக அரங்கில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
இந்நிலையில், டிரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற ஒடுக்குமுறை முதல் திருநங்கை உரிமைகள் இரத்து மற்றும் காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை மாற்றும் திட்டம் வரை அனைத்து நடவடிக்கைகளுக்கும் கண்டனம் தெரிவித்தே போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
கலிபோர்னியா, மின்னசோட்டா, மிச்சிகன், டெக்சாஸ், விஸ்கான்சின், இண்டியானா மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள மாநிலங்களிலும் நேற்று ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பைக் கண்டித்து பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்கள் எழுப்பியுள்ளனர்.