ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் விரைவில் பேச்சு நடத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 2025 ஜனவரியில் புதிய ஜனாதிபதியாக அவர் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் நேற்று பேசிய ட்ரம்ப்,
“அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றி பெற்ற பிறகு 70-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு பேசினர். ஆனால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பேசவில்லை. விரைவில் நாங்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவோம். அவருடன் பேச தயாராக இருக்கிறேன்” என்றார்.
ரஷ்யா – உக்ரைன் எல்லை பகுதிகளில் தீவிரமாக போர் நடந்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் எல்லை பகுதிகளில் இருந்து பின்வாங்க வேண்டும் என ட்ரம்ப் அறிவுறுத்தக்கூடும் என்று தெரிகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்க்கப்படாது என்று ட்ரம்ப் தரப்பில் ரஷ்யாவுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை ரஷ்ய, உக்ரைன் போர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.