தடுப்பூசி அட்டை இல்லையெனில், பேருந்துகளில் இரட்டை கட்டணமா?

ஒரு முறையேனும் கொவிட் தடுப்பூசியேனும் பெற்றுக்கொள்ளாதோர், பேருந்துகளில் பயணிக்கும் போது, சாதாரண பேருந்து கட்டணத்தை விடவும் இரண்டு மடங்கான கட்டணத்தை அறவிட வேண்டிய நிலைமை ஏற்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவிக்கின்றார்.

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படுகின்றமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பேருந்துகளில் ஏறும் போது, கொவிட் தடுப்பூசி பெற்றமைக்கான அட்டையின் பிரதியையேனும், தம்வசம் வைத்துக்கொள்ளுமாறு அவர் பயணிகளிடம் கோரியுள்ளார்.

டெல்டா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், சங்கம் என்ற விதத்தில் அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் யோசனைகளை அரசாங்கத்திற்கு முன்வைப்பது தமது பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் மூலம் தான் இன்று அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தூர பிரதேச பேருந்து சேவைகளில் பயணிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டோர், கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டமைக்கான அட்டையின் பிரதியை வைத்திருப்பது கட்டாயம் எனவும் கெமுணு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles