” கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் பட்சத்தில், அரசால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் இடைக்கால வைத்தியசாலைகளாக மாற்றப்படும்.” – என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது 12 ஆயிரம் பேர்வரை இருக்கின்றனர். அவர்களை பராமரிப்பதென்பதே சவாலுக்குரிய காரணம். எனவே, தனிமைப்படுத்தல் நிலையங்கள் இடைக்கால வைத்தியசாலையாக மாற்றப்படும்பட்சத்தில், வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் இடைக்கால வைத்தியசாலையொன்று அமைக்கப்படும் என மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் தெரிவித்தார். சுமார் 2 ஆயிரம் பேருக்கு சிகிச்சையளிக்கும் வகையில் குறித்த வைத்தியசாலை படையினரின் உதவியுடன் நிறுவப்படும் எனவும் அவர் கூறினார்.










