தனி வீட்டுத் திட்டத்தை துரிதப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை

நுவரெலியா இராகலை தோட்டத்திற்கு உட்பட்ட இராகலை இரண்டாம் பிரிவு தோட்டத்தில் தற்காலிக குடியிருப்பில் வசித்து வரும் 14 குடும்பங்களுக்கு நிர்மானிக்கப்பட்டு வரும் தனி வீட்டு திட்டத்தை இழுத்தடிக்காது துரிதப்படுத்துமாறு தற்காலிக குடியிறுப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இராகலை இரண்டாம் பிரிவு தோட்டத்தில் இவ்வருடம் மார்ச் மாதம் (11) ஆம் திகதி இலக்கம் 01 லயன் குடியிறுப்பு திடீர் தீபத்துக்கு உள்ளானது.

இவ்விபத்து சம்பவத்தில் குறித்த லயன் குடியிருப்பில் 14 வீடுகள் முற்றாக எறிந்து அதில் வசித்து வந்த இரண்டு உபக்குடும்பங்களுடன் 16 குடும்பங்களை சேர்ந்த 54 பேர் பாதிக்கப்பட்டனர்.

அதேநேரத்தில் தங்களது உடமைகள் மற்றும் ஆவணங்களை இழந்து நிர்கதிக்கு ஆளான இம் மக்களுக்கு நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகம் முன்வந்து இராகலை தோட்ட நிர்வாகத்தின் ஊடாக ஆலய மண்டபம் மற்றும் பிள்ளைப்பராமரிப்பு ஆகியவற்றில் தற்காலிகமாக தங்கும் இடங்களை அமைத்து வசதிகளை ஏற்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதி கொரோனா பேரிடர் காலம் என்பதால் பாதிக்கப்பட்ட மக்களை சமூக இடைவெளிக்கு மத்தியில் தங்க வைக்க பாரிய பிரச்சினைகளும் ஏற்பட்டிருந்தது.

இதனை கருத்திற் கொண்டு தோட்ட நிர்வாகத்திடம் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக பொதுவான இடம் ஒன்றில் 14 தற்காலிக வீடுகளை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கமைய தோட்ட நிர்வாகம் மற்றும் பெருந்தோட்ட மனிதவள நிதியம் ஆகியவற்றின் முயற்சியில் தகரத்திலான தற்காலிக குடியிறுப்புகள் அமைக்கப்பட்டு இன்று எட்டு மாதங்களாக பாதிக்கப்பட்ட மக்கள் அதில் வசித்து வருகின்றனர்.

குடிநீர் பிரச்சினை,மலசலக்கூடப் பிரச்சினை,உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து இன்றும் தற்காலிக குடியிருப்பில் வசித்து வரும் இம்மக்கள் சொல்லன்னா துயரங்களுக்கு மத்தியில் தமது அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தீ விபத்தில் லயன் குடியிறுப்பினை முற்றாக இழந்து தங்குமிட வசதியை இழந்து வாழும் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு தனி வீடுகளை அமைத்து வாழ வசதிகளை செய்யுமாறு பல்வேறு மட்டத்தில் அழுத்தங்களும் வழங்கப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் இந்த விடயம் குறித்து தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இதனையடுத்து இராகலை தோட்டத்தை முகாமைத்துவம் செய்யும் மத்துரட்ட பெருந்தோட்ட யாக்கத்தின் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இராகலை தோட்ட இலக்கம் 21 தேயிலை மலையில் தனிவீடுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கமைய தனி வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டு வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கட்டுமான பணிகள் தடைப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மனித வள நிதியத்தின் ஊடாக தலா ஒருவீட்டுக்கு 13 லட்சம் ரூபாய் செலவில் இந்த தனி வீடுகள் நிர்மானிக்கப்பட்டாலும் இதற்காக செலவு செய்யப்படும் பணத்தில் அரைவாசி தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும் என்ற ஒப்புதலில் இவ்வீடுகளுக்கான கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் தற்போது கட்டுமான பணிகள் தடைப்பட்டும்,தாமதப்படுத்தும் வருகின்றமையினால் தற்காலிக குடியிருப்பில் வசதிகள் அற்று வாழும் மக்கள் மழைக்காலங்களில் பாரிய பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வருவருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே தனி வீடுகள் அமைக்கும் கட்டுமான பணிகள் துரிதமாக்கப்படாத நிலையில் பாரிய சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆகையால் புதிதாக நிர்மானிக்கப்பட்டு வரும் தனிவீடுகளின் கட்டுமான பணியை பூர்த்தி செய்து பயனாளிகளுக்கு விரைவாக கையளிக்க சம்பந்தப்பட்டவர்கள் இழுத்தடிக்காது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வீடுகளின் கட்டுமான பணியில் கால தாமதம் ஏற்படுகின்ற நிலையில் தற்காலிக குழிகளில் வசிக்கும் பாடசாலை மாணவர்கள்,நோயாளிகள்,மற்றும் யுவதிகள் உள்ளிட்ட பலர் பல்வேறு பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

-நிருபர் – டி.சந்ரு-

Related Articles

Latest Articles