யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெறுமனே 24 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் மக்கள் நிராகரித்ததாக அநுர அரசு , தப்பு கணக்கு போடுகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம், கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
பாரம்பரிய தமிழ்க் கட்சிகளைத் தமிழ் மக்கள் புறக்கணித்து தேசிய மக்கள் சக்திக்கு ஆணையை வழங்கியுள்ளனர் என்று கூறும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அந்த மக்கள் ஆணையை வைத்து தையிட்டி விகாரைப் பிரச்சினையைத் தீர்த்திருக்கலாமே? எனவும் கஜேந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
76 சதவீதமான வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக வழங்கப்பட்டிருக்கின்றன. 24 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் மக்கள் நிராகரித்ததாக அரசு கணக்குப் பார்க்கின்றது எனில் நாட்டின் பொருளாதாரக் கணக்கு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை மக்கள் யோசிக்க வேண்டும் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
