தமிழக அரசின் நன்கொடையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள அரிசி மற்றும் பால்மா என்பனவற்றை இன்று மாலையிலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பும் செயன்முறை ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் வறுமை நிலையிலுள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா 20 கிலோ அரிசி வீதம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் அந்த முடிவு மாற்றப்பட்டு அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா 10 கிலோ அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நன்கொடையின் முதற்கட்ட உதவிகள் இலங்கையை நேற்றுமுன்தினம் வந்தடைந்துள்ளன. அதில் 9 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி, 50 மெற்றிக் தொன் பால்மா, 25 மெற்றிக் தொன் மருந்து என்பன உள்ளன. இவற்றில் அரிசி மற்றும் பால்மா என்பனவற்றை 25 மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடல் பிரதமரின் செயலர் தலைமையில் நேற்று மாலை ’சூம்’ தொழில் நுட்பத்தின் ஊடாக மாவட்டச் செயலர்களுடன் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், உணவுப் பாதுகாப்பு ஆணையாளர் திருமதி கிருஸ்ணமூர்த்தி ஆகியோரும் பங்கேற்றனர்.
நிதி அமைச்சு 25 மாவட்டச் செயலர்களுக்கும் முன்னர் அனுப்பிய கடிதத்தில், வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு தலா 20 கிலோ அரிசி வீதம் வழங்கப் பணித்திருந்தது.
ஆனால் நேற்றைய கலந்துரையாடலில் அந்த முடிவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து மக்களுக்கும் ஏதோவொரு வகையில் அரிசிக்கான தட்டுப்பாட்டை எதிர்கொள்வதால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 10 கிலோ வீதம் அரிசியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்றுள்ள 9 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை பங்கிட்டு முன்னுரிமை அடிப்படையில் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு விநியோகிக்கப்படவுள்ளன. எஞ்சிய 31 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியும் இலங்கைக்கு அடுத்த மாதம் முற்பகுதியில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதனை எஞ்சியுள்ள குடும்பங்களுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு பால்மா பைக்கெற்றுகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதிலும் தற்போது முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்படும் குடும்பங்களுக்கே வழங்கப்படவுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை குடும்பங்களுக்கு அரிசி, பால்மா வழங்குவது என்பது தொடர்பான இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு ஆணையாளர் திருமதி கிருஸ்ணமூர்த்தி, உதயன் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.
இறுதி முடிவு எடுக்கப்பட்டதும் மாவட்டங்களுக்கான விநியோகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும். யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதிக்கான விநியோகம் ரயில் மார்க்கம் ஊடாக இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, இந்தப் பொதிகளை ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து, அதனை ஏற்றி இறக்குவதற்கான கூலி என்பனவற்றுக்கான செலவுகளை அந்தந்த மாவட்டச் செயலகங்களே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் எந்தவொரு நிதியுதவியும் அதற்கு வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டச் செயலகங்கள், நன்கொடையாளர்களின் உதவிகளை நாடுவதற்கு முடிவு செய்துள்ளன.