இலங்கை தமிழரக் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், எஸ். சிறிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டம், அக்கட்சியின் சிரேஷ்ட தலைவரான இரா. சம்பந்தனின் கொழும்பில் உள்ள வதிவிடத்தில் இன்று மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கூறியவை வருமாறு,
” கட்சி மாநாடு சம்பந்தமாக பல விடயங்கள் அலசி ஆராயப்பட்டன. தலைவர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ( ஶ்ரீதரன், யோகேஸ்வரன் மற்றும் நான்)
போட்டி இல்லாமல் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தலைவர் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்ற கருத்து கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. தவிர்க்க முடியாத காரணத்தால் போட்டி இடம்பெற்றால் தேர்வு எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பது குறித்து கட்சி யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாங்கள் மூவரும் ஒரு நாள் அவகாசம் கோரினோர். மூவரும் தனியே சந்தித்து பேச்சு நடத்தவுள்ளோம். அதன்பின்னர் கட்சி தலைவருக்கும், செயலாளருக்கும் முடிவு அறிவிக்கப்படும்.
இணக்கப்பாட்டுடனோ அல்லது கட்சி யாப்பின் பிரகாரமோ தேர்வு 21 ஆம் திகதி நடைபெறும். அதனை தொடர்ந்து கட்சி மாநாடு 28 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறும்.” – என்றார்.
