தமிழர்களுக்காக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகும் சிறிதுங்க ஜயசூரிய

” தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயம் அரசியல் களத்தில் பேசுபொருள் மாத்திரமே. அது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயமாகும். அவ்வாறான முயற்சி இடம்பெற்றாலும் இந்தியாவின் கோரிக்கையின் பிரகாரம் அதனை கடைசியில் கைவிட்டுவிடுவார்கள்.” – என்று ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசியல் களத்தில் நாடிபிடித்து பார்ப்பதற்காக அவ்வப்போது ஏதேனும் ஏற்பாடுகள் இடம்பெறும். அந்தவகையிலேயே தமிழ் பொதுவேட்பாளர் விடயமும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது நடைமுறை சாத்தியமற்ற விடயம். அதைப்பற்றி பேசி பயன் இல்லை.

ஏனெனில் இலங்கையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலானது இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான போட்டியாகவே அமையவுள்ளது.

கடைசியாக மாலைதீவில் நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் இந்நிலைமையே காணப்பட்டது. அந்தவகையில் மொட்டு கட்சி தரப்புக்கு சீனாவும், சஜித் தரப்புக்கு இந்தியாவும் பின்புலமாக இருக்கும்.

தற்போது பொதுவேட்பாளர் பற்றி பேசுபவர்கள் இந்திய கோரிக்கையை ஏற்று, அந்நாடு சார்பு வேட்பாளரையே ஆதரிப்பார்கள்.

அதேவேளை, தேசிய இனப்பிரச்சினைக்கு ‘சுயநிர்ணய’ உரிமையை அடிப்படையாகக்கொண்ட அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள கட்சி எமது கட்சியாகும். இங்குள்ள கட்சிகளிடம் இந்த கொள்கை இல்லை. எனவே, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மையப்படுத்தியதாக எமது கட்சியும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்கும்.” – என்றார்.

Related Articles

Latest Articles