தமிழ்த் தேசியப் பேரவையினர் தமிழக முதல்வருடன் சந்திப்பு!

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினர் சந்தித்துப் பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், அக்கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் கனகரத்தினம், கொள்கைப் பரப்புச் செயலாளர் சட்டத்தரணி நடராஜா காண்டீபன், தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள்.

சந்திப்பின்போது தமிழ்த் தேசியப் பேரவையினரால் இலங்கை அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து ஏக்கிய ராஜ்ய அரசமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், புதிய அரசு உருவாக்கவுள்ள புதிய அரமைப்பில் தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய சமஷ்டி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்துவதற்குத் தமிழக அரசு இந்நிய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

மேலும், பொருளாதார ரீதியாகப் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள இலங்கை அரசு இந்தியாவின் பங்களிப்பின்றி வளர்ச்சியடைய முடியாது. தமிழகத்தோடு பொருளாதார ரீதியில் நெருக்கமான உறவையும் தொடர்பாடலையும் உருவாக்காமல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி என்பதும் பாரிய சவாலாகவே இருக்கும். இதன் பின்னனியில் இலங்கையின் மீது கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தி, தமிழர்கள் விரும்பும் தீர்வை இந்தியாவினால் சாத்தியமாக்க முடியும் என்றும் தமிழ்த் தேசியப் பேரவையினர் தெரிவித்தனர்.

அத்தோடு, தமிழக மற்றும் ஈழக் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாகவும் தமிழ்த் தேசியப் பேரவையினர் உரையாடினர்.

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழக மீனவர்களின் எல்லை தாண்டும் பிரச்சினையை இலங்கை அரசு தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழகத்தையும் ஈழத் தமிழர்களையும் நிரந்தரப் பகையாளிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது என்றும், இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி இந்திய நலன்களுக்கு முரணான வெளிச்சக்திகள் இலங்கையில் காலூன்றி வருகின்றன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்தி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காணத் தமிழக அரசு தலையிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

சந்திப்பின் முடிவில் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிய அரசமைப்பு தொடர்பாகவும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டும் பிரச்சினை தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தனித்தனியான கோரிக்கைக் கடிதங்களைக் கையளித்தார்.

முதலமைச்சரின் சந்திப்பின் பின்னர் ஏனைய கட்சிகளின் தலைவர்களையும் விரைவில் சந்திக்கவிருப்பதாகத் தமிழ்த் தேசியப் பேரவையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின்போது இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவனும் கலந்துகொண்டிருந்தார்.

Related Articles

Latest Articles