இலங்கையில் வாழும் தமிழ்பேசும் சமூகங்களை அரவணைத்துக்கொண்டு , பலமானதொரு தமிழ் பேசும் மக்களின் சக்தியாக முன்னோக்கி பயணிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் ஓர் உறவு பாலமாக இருப்பாரென நம்புகின்றோம் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு தமது வாழ்த்துகளையும் வேலுகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
“இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் மலையகத்துக்கும் இடையிலான உறவு பல தசாப்தங்களாவே தொடர்கின்றன. தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்தவர்களெல்லாம் மலையகத் தமிழர்களையும் அரவணைத்துக்கொண்டே பயணித்துள்ளனர், அவர்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காக குரலும் கொடுத்துள்ளனர்.
இலங்கையில் வாழும் தமிழ் பேசும் சமூகங்களுக்கு ஒற்றுமை என்பமே பெரும் சக்தியாக உள்ளது, அந்த ஒற்றுமையை சீர்குலைக்க பேரினவாத சக்திகள் முற்பட்டுவருகின்றன. எனவே, இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் பேசும் சமூகங்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும். அதற்கான ஓர் உறவு பாலமாக தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் இருப்பார் என நம்புகின்றோம்.
தலைமைப்பதவியில் இருந்துகொண்டு, தமது சேவைகளை அவர் சிறப்பாக முன்னெடுக்கவும் வாழ்த்துகளைக் கூறிக்கொள்கின்றேன்.” – என்றும் வேலுகுமார் எம்.பி. குறிப்பிட்டார்.










