தலவாக்கலை கொத்மலை வீதியில் இன்று புதன்கிழமை (15) தனியார் பஸ்ஸொன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலியாகியுள்ளார்.
லிந்துலை மெராயா தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நடராஜ் செல்லதுரை வயது (46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தலவாக்கலை சுற்று வட்டத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலை பஸ் தரிப்பிடத்திலிருந்து பூண்டுலோயா நோக்கி சென்ற தனியார் பஸ் பத்தனை பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுமே தலவாக்கலை சுற்று வட்டத்திற்கு முன்பாக நேருக்கு நேர் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.










