தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று இரண்டு இளைஞர்கள் வாகனமொன்றில் மோதி சென்ற சாரதியை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று அதிகாலை வேளையில் தலவாக்கலை நகர மத்தியில் பட்டாசுகளை கொளுத்திக்கொண்டிருந்தபோது மஹேந்திரா பொளேரோ கெப் ரக வாகனமொன்றில் மோதி இழுத்துச் செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த இளைஞன் சிகிச்சைப் பலனின்றி கடந்த (31) உயிரிழந்தார்.
சென்கிளையார் புகையிரத விடுதியைச் தற்காலிக வசிப்பிடமாக கொண்ட செல்வநாதன் புஸ்பகுமார் (வயது 28) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனுக்கு நீதிகோரியும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சாரதியை மீண்டும் கைது செய்யுமாறுகோரியும் 100 இற்கும் அதிகமான இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.இதனையடுத்து குறித்த சந்தேக நபரான சாரதி நேற்று (3) தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது சந்தேக நபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை பி.கேதீஸ்










