இலங்கையில் இருந்து தமிழகத்துக்கான படகுசேவை இம்மாதத்துக்குள் ஆரம்பமாகும் என எதிர்பார்ப்பதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அமைச்சர் இது தொடர்பில் கூறியவை வருமாறு,
” காங்கேசன்துறை மற்றும் தலைமன்னாரில் இருந்து தமிழகத்துக்கு படகு சேவையை ஆரம்பிப்பதற்காக எமது தரப்பில் இருந்து செய்ய வேண்டிய அனைத்து விடயங்களையும் செய்துள்ளோம். இனி இந்திய தரப்பில் இருந்துதான் நடவடிக்கை இடம்பெற வேண்டும்.
நான் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளேன். இது சம்பந்தமாக அந்நாட்டு அமைச்சருடன் பேச்சு நடத்துவேன். எனக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ஓரிரு நாட்களுக்குள் பரீட்சார்த்த படகுசேவை ஆரம்பமாகும் என தெரியவருகின்றது. எப்படியும் இம்மாத இறுதிக்குள் படகு சேவை ஆரம்பமாகும். பலாலி விமான நிலையத்துக்கு விமானத்தை கொண்டுவந்ததுபோல் இந்த நடவடிக்கையும் வெற்றிகரமாக இடம்பெறும்.” – என்றார்.










