பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களின் பதவிகள் பறிபோயும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2018 பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளாட்சி சபைத்தேர்தலின்போது ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தின்கீழ் தொழிலாளர் தேசிய முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டது.
குறிப்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்கள் யானை சின்னத்தின்கீழ் களமிறங்கி வெற்றிபெற்றவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களை ஐ.தே.க. நீக்கிவருகின்றது.
இதன்காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறிகொத்தவுக்கு சென்ற திகாம்பரம், இவ்விவகாரம் தொடர்பில் ஐ.தே.க. பொதுச்செயலாளர் பாலிய ரங்கே பண்டாரவுடன் கலந்துரையாடியுள்ளார் எனவும், தமது சகாக்களின் பதவி பறிக்கப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார் என அறியமுடிகின்றது.
திகா அணி உறுப்பினர்களை நீக்குமாறு நவீன் திஸாநாயக்க மற்றும் கே.கே. பியதாச ஆகியோர் வலியுறுத்திவருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.