சீனாவிடம் இருந்து திபெத்திய சுதந்திரம் குறித்த பிரச்சனையை வலியுறுத்தி டாக்காவில் மக்கள் பெய்ஜிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். திபெத்துக்கு சுதந்திரம் வழங்குவதற்கு உலக சமூகம் சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கேட்டுக் கொண்டனர். டாக்காவில் உள்ள ஷாபாக் தேசிய அருங்காட்சியகம் முன்பு முக்திஜோதா மஞ்சாவின் தலைமையில் ஒற்றுமைப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
“சீனா மனித உரிமைகளை மீறுகிறது”, “திபெத் சீனாவின் பகுதி அல்ல”, “சுதந்திர திபெத் சீனா அவுட்” என்றவாறான பல பதாகைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் காணப்பட்டனர். திபெத்தியர்கள் பெப்ரவரி 13 ம் திகதியை சுதந்திர தினமாகக் குறிக்கின்றனர், 1913 ஆம் ஆண்டில் இத்தினத்திலேயே 13 வது தலாய் லாமா திபெத்திய சுதந்திரத்தை “சுதந்திரப் பிரகடனத்தின்”மூலம் அறிவித்தார்.
மார்ச் 1959 இல் திபெத் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டது, அதன் பின்னர் திபெத்தியர்கள் மிக மோசமான மனித உரிமை மீறல்களை எதிர்கொண்டுள்ளனர். சமீபத்திய அறிக்கையில், ஐ.நா. வல்லுனர்கள், திபெத்திய மக்களைக் கலாச்சார ரீதியாகவும், மத ரீதியாகவும், மொழி ரீதியாகவும் ஒரு குடியிருப்பு கல்விமுறை மூலம் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்ட சீன அரசின் கொள்கைகளால் திபெத்திய சிறுபான்மையினத்தின் சுமார் ஒரு மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக எச்சரித்தனர்.
“சமீபத்திய ஆண்டுகளில், திபெத்திய குழந்தைகளுக்கான குடியிருப்பு கல்விமுறை, சர்வதேச மனித உரிமைகள் தரத்திற்கு மாறாக, பெரும்பான்மையான ஹான் கலாச்சாரத்தில் திபெத்தியர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் ஒரு கட்டாயத் திட்டமாக செயல்படுவதைக் கண்டு நாங்கள் மிகவும் கவலையடைகிறோம்” என்று ஐ.நா நிபுணர்கள் தெரிவித்தனர். அதிகரித்து வரும் சீன அட்டூழியங்களால், திபெத்தில் இருந்து ஏராளமான திபெத்தியர்கள் இடம்பெயர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அவர்கள் சுதந்திர திபெத்தை கோரி, தங்களுக்கு நீதி வழங்க ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்தின் அவசர தலையீட்டை கோருகின்றனர். திபெத்தியர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு வங்கதேச ஆதரவு பெருகி வருவதற்கு டாக்காவில் நடந்த ஒற்றுமை அணிவகுப்பு சான்றாகும்.