வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்ய எதிர்பார்க்கும் எந்த இலங்கையரும் அத்திருமணத்தைப் பதிவுசெய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் ‘ பாதுகாப்பு தடைநீக்கல் சான்றிதழ் பெறுவது’ 2022ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளமையால் திருமணம் செய்துகொள்ளும் எதிர்பார்ப்பில் இலங்கை வந்துள்ளவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளமை பற்றிய தகவல்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளியாகியவண்ணமுள்ளன.
புதிய பாதுகாப்பு விதிமுறைகளை தவிர்த்துக்கொள்வதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டவர்கள் பலரும் திருமணப்பதிவாளர்களிடம் படையெடுத்துதவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் பணத்தையும் பெறுமதியான நேரத்தையும் செலவழித்து திருமணத்திற்காக இலங்கை விஜயம் செய்துள்ள வெளிநாட்டவர்கள் எப்படியேனும் திருமணப்பதிவையேனும் நடத்திமுடித்துவிடவேண்டும் என்ற முனைப்பில் இறுதிக்கட்ட நகர்வுகளில் முனைப்பாக இறங்கியுள்ளதாக அறியமுடிகின்றது.
கொழும்பைச் சேர்ந்த திருமண பதிவாளரொருவர் கருத்துவெளியிடுகையில் ‘ இலங்கை அரசாங்கம் புதிதாக கொண்டுவந்துள்ள நடவடிக்கை முற்றுமுழுதாக வெளிநாட்டவர்களையா கட்டுப்படுத்தும் அன்றேல் இலங்கையைப்பூர்வீகமாக கொண்ட ஆனால் தற்போது வெளிநாடுகளின் பிரஜைகளாக மாறிவிட்டவர்களையும் கட்டுப்படுத்துமா என்பது தொடர்பில் தமக்கே தெளிவற்ற நிலை இருப்பதாக தெரிவித்தார்.
மற்றுமொரு திருமணப் பதிவாளரிடம் வினவியபோது ‘ இந்த நடைமுறை 2022 ஜனவரி முதலாம் திகதி முதலே அமுலுக்கு வருகின்ற காரணத்தால் திருமணத்திற்காக இலங்கை வந்திருக்கின்றவர்கள் இந்த வருட முடிவிற்குள் எழுத்துமூல திருமணப்பதிவை செய்வதற்கு தாம் ஆலோசனை வழங்குவதாக தெரிவித்தார். எழுத்துமூல பதிவை முடித்துவிட்டு பின்னர் தேவைப்படின் அவர்கள் அடுத்த வருடத்தில் வைபவத்தை எடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட ஜோடிகள் கடந்த சில தினங்களுக்குள்ளாக தமது அலுவலகத்தில் எழுத்துமூல திருமணப்பதிவைச் செய்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள சூழல் தொடர்பாக பதிவாளர்களும் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
நன்றி – குளோப் தமிழ்










